Sunday, October 14, 2018

கிருத்திகை நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் அறிவாற்றலும் நல்ல பேச்சாற்றலும் கூடவே செயல்திறனும் மிக்கவர்கள். இவர்களின் தூக்கத்திற்கான நேரமும் மிகக் குறைவாகவே இருக்கும். இவர்களின் அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் மற்றவர்களை வியக்க வைக்கும். திட சித்தம் உடையவர்கள், நல்ல தலைமைப்பண்பு கொண்டு விளங்குவார்கள். உறவினர்களும் நண்பர்களும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் மீது வெறுப்பு காட்டுவார்கள்.நேர்மையும் நாணயமும் உள்ளவர்கள், அதேசமயம் நல்ல லாபம் அடைய முடியும் என்று இவர்களுக்கு தெரிந்தால் தவறான வழியில் செல்லவும் தயாராகவும் இருப்பார்கள். அரசியலில் செல்வாக்கும் அதன்மூலம் ஆதாயமும் அடைவர். அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்லும் குணம் குறைவு. அதனால் அனைவருடனும் கருத்து வேற்றுமையும் சண்டை சச்சரவுகளும் இவர்களுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும். இனிமையான வார்த்தைகளால் அனைவரையும் கவர்வார்கள், சுற்றத்தாரை விரும்பி வரவேற்கும் குணமும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்களை போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும் வளமான வாழ்வும் செல்வச்செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இனி காண்போம்.

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதெய்வம் :

முருகப்பெருமான்

கிருத்திகை நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வமாக ஸ்ரீ முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். குறிப்பாக திருசெந்தூர் முருகப்பெருமானை கார்த்திகை நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்வது அபரிமிதமான பலன்களைத் தரும். மேலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கும் எந்தவொரு தலத்திலும் வழிபாடுகள் செய்யலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை :


அக்னி பகவான்

கிருத்திகை நட்சத்திர அன்பர்களின் அதிதேவதையாக இருந்து அருள் பாலிப்பவர் அக்னி பகவான் ஆவார். இவர் பிரஜாபதிக்கும் சாண்டிலிக்கும் பிறந்தவர், முருகப்பெருமானது கொடியில் சேவலாக நிற்பவர், இவரது வாகனம் செம்மறியாடு, இவரது ஆயுதம் ஸ்ருக் மற்றும் ஸ்ருவம் ஆகும். வேள்விகளில் அக்னிதேவர் மூலமாகவே அவிர்பாகம் தேவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தீச்சுடர்களை மகுடமாக கொண்டு இரண்டு முகங்களோடும் மூன்று கால்களோடும் தீச்சுடர்கள் ஏந்திய ஏழு கரங்களோடும் விளங்குபவர். இத்தகைய அக்னி பகவானை திருவாவூர் மாவட்டம் திருப்புகழூரில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் திருக்கோவிலிலும் மற்றும் கீரனூர் சிவலோக நாதர் திருக்கோவிலிலும் தரிசனம் செய்யலாம். அக்னீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவஸ்தலங்கள் அக்னி பகவான் வழிபட்ட ஸ்தலங்களாகும், எனவே அக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ள சிவஸ்தலங்களிலுள்ள அக்னி பகவானை கார்த்திகை நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.


கிருத்திகை அக்னி தேவர் மந்திரம் :
"கிருத்திகா அக்னிதேவத்யா:
 மேஷ வாகன சம்ஸ்திதா !
 ஸ்ருக் ஸ்ருவாவபீ திவரத்ரு:
 சதுர்ஹஸ்தா நமாம்யஹம் !!"

அக்னி காயத்ரி மந்திரம் :
"ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே
 அக்னிமக்னாய தீமஹி
 தன்னோ அக்னி ப்ரசோதயாத்"

கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரம் :
"ஓம் வன்னி தேஹாயை வித்மஹே
 மஹாதபாயை தீமஹி
 தன்னோ கிருத்திகா ப்ரசோதயாத்"

கிருத்திகை நட்சத்திர பரிகார விருட்சம் :


அத்தி மரம்

Bottanical Name: Ficus Racemosa

கிருத்திகை நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் அத்தி மரம் ஆகும். பிரம்மவிற்க்கு மிகவும் உகந்த அத்தி மரத்தை "பிரம்ம விருட்சம்" என்பார்கள். நவகிரகங்களில் சுக்கிரனுக்கு பிடித்தமான சமித்து அத்தி, மூதாதையருக்கு செய்யும் நேர்திக் கடன்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது இது, அத்தி சமித்து கொண்டு செய்யப்படும் வேள்வியால் சத்ரு நாசம் ஏற்படும், பில்லி சூனியம் ஏவல்கள் போன்ற கெடுதல்கள் நீங்கும், மனோபலம் உண்டாகும். பால் வடியும் மரமாதலால் கார்மேகங்களை கவர்ந்திழுத்து மழையை பொழிய வைக்கும் சக்தி கொண்டது. அத்திமர சுள்ளிகளால் செய்யப்படும் வேள்விகளால் வெளிப்படும் புகை கருமேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கும்.

கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் தாங்கள் பிறந்த கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் அத்தி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்களுக்கு சென்று அத்தி மரத்திற்க்கு நீர் ஊற்றுவதும், அத்தி மரத்தினடியில் அமர்ந்து தியானிப்பதும், விருட்ச பரிகாரங்கள் செய்து கொள்வதும் சிறந்த பரிகாரங்களாகும். கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் அக்னி காயத்ரி மந்திரம், அக்னி தேவர் மந்திரம் மற்றும் கிருத்திகை நட்சத்திர காயத்ரி மந்திரங்களை அத்தி மரத்தினடியில் அமர்ந்து உச்சாடனம் செய்வது வாழ்வில் தோன்றும் துன்பங்களை போக்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றியும், உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும் வற்றாத செல்வமும் மங்காத புகழும் பெற்று நல்வாழ்வு வாழலாம்.

அத்தி மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ள ஆலயங்கள் :
திருச்செந்தூர் முருகர் சந்நிதி
திருவான்மியூர் மருந்தீசர் சந்நிதி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
கீரனூர் சிவலோக நாதர்

இருபத்தியேழு நட்சதிரங்களுக்கும் அதனதன் விருட்சம், அதிதெய்வம் மற்றும் அதிதேவதை இம்மூன்றையும் ஒரே இடத்தில் தரிசிக்கும்படி "ஸ்ரீ விருக்ஷ பீடம்" நிர்மானிக்கப்பட்டு தினசரி பூஜைகள் செய்து ஐயா "லக்ஷ்மி தாச ஸ்வாமிகள்" அவர்களால் நேர்த்தியாக நிர்வகிக்கப்படுகிறது. கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர நாட்களில் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" வந்து தங்களுடைய நட்சத்திர விருட்சத்தின் கீழமர்ந்து தியானிப்பதால் தங்கள் வாழ்வில் கர்மவினையால் உண்டான பாதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.


பரணி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

"பரணியில் பிறந்தார் தரணி ஆள்வார்" என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதேபோல பரணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் மேஷ இராசியில் இடம் பெறுவதால் இது ஒரு முழுமையான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்வை முழுமையாக அனுபவித்து வாழ பிறந்தவர்கள். சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள், சரியான அளவு அமைப்புடன் கூடிய உடல்வாகு தோற்றப்பொலிவு கொண்டவர்கள், நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கொண்டவர்கள், சமயோஜித புத்தி உடையவர்கள், எத்தகைய துன்பத்தினையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாமல் அறிவுப்பூர்வமாக அதை சிந்தித்து துன்பத்தில் இருந்து வெளியேறுவார்கள். சாந்தமான சுபாவமும் இரக்க குணமும் இயற்கையிலேயே அமையப்பெற்றவர்கள். அதிவேக சிந்தனையும் செயல்திறனும் கொண்டவர்கள், பிறரை எளிதாக புரிந்து கொள்பவர்கள். பிரயாணத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள், காதல் ரசனை மிக்கவர்கள், எளிதில் உணர்ச்சிவசம் அடைபவர்கள், திட சித்தம் இல்லாதவர்கள். இவர்கள் அதிகமான பகைவர்களை உண்டாக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு உண்டான நட்சத்திர தோஷங்களை போக்கவும், இவர்களின் வாழ்வில் சோதனைகள் மறைந்து சாதனைகளும் சந்தோஷங்களும் நிறைந்திருக்கவும், வளமான வாழ்வும், செல்வச்செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இனி காண்போம்.பரணி நட்சத்திர அதிதெய்வம் :
"துர்க்கை அம்மன்"

பரணி நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வம் காளி என்றும் துர்க்கை என்றும் அழைக்கப்படும் அம்மன் ஆகும். கும்பகோணம் அருகிலுள்ள பழையாறை எனும் ஊரிலுள்ள பட்டீஸ்வரம் கோவிலில் அருள்பாலிக்கும் அஷ்டபுஜ துர்க்கை அம்மன் தான் பரணி நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வமாக விளங்குகிறது. பரனி நட்சத்திரம் வரும் தினங்களில் இங்கு சென்று வழ்படுவது சாலச் சிறந்ததாகும்.துர்க்கை அம்மனின் காயத்ரி மந்திரம் :
"ஓம் காத்யாயனாய வித்மஹே
 கன்யா குமாரீய தீமஹி !
 தன்னோ துர்க்கி ப்ரசோதயாத் !!"


பரணி நட்சத்திர அதிதேவதை :


"எமதர்ம ராஜா"

இப்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களின் ஆயுள் கணக்கை முடிப்பவர் யமனே, நீல நிற தேகங்கொண்டு கைகளில் பாசக்கயிறும் தண்டமும் ஏந்தி நீதியில் தராசு முள் போன்று நடுவு நிலை காப்பவர். எருமை வாகனம் ஏறி வருபவர், சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தவர், சனீஸ்வரனின் சகோதரன் யமன். இவரே பரணி நட்சத்திர அதிதேவதையாக அருள் பாலிக்கிறார்.

எமதர்மருக்கு என்று தனிக்கோவில்கள் தமிழகத்தில் இல்லை, தனி சன்னிதியில் இருந்து எமன் அருள்பாலிக்கும் கோவில்கள் மட்டுமே உள்ளன. அவை முறையே, திருவாஞ்சியம், திருப்பைஞ்சீலி, கொடியலூர் மற்றும் வெள்ளலூர் ஆகும். பரணி நட்சத்திர அன்பர்கள் இத்திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள எமதர்மனை பரணி நட்சத்திர நாட்களில் தரிசனம் செய்யலாம்.


யம காயத்ரி மந்திரம் :
"பாச தண்டோஜ்வல புஜத்வயம் மகிஷ வாகனம் !
 யமம் நீலதனும் பீர்ம பரணி தேவதாம் பஜே!!"


பரணி நட்சத்திர காயத்ரி மந்திரம் :
"ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே
 தண்டதராயை தீமஹி
 தன்னோ பரணி ப்ரசோதயாத்"


பரணி நட்சத்திர பரிகார விருட்சம் :


நெல்லி விருட்சம்

Bottanical Name: Phyllanthus Emblica

பரணி நட்சத்திர அன்பர்களின் பரிகார விருட்சம் நெல்லி மரம் ஆகும். தவா என்றால் கருநெல்லி என்று பொருள், மஹாவிஷ்ணுவுக்கு மாதவா என்று பெயர் உண்டு, லக்ஷ்மியின் அம்சம் தவா உடன் சேர்ந்ததால் மாதவா என்ற பெயர் வந்ததாக பெரியோர்கள் சொல்கிறார்கள். பரணி நட்சத்திர அன்பர்கள் தாங்கள் பிறந்த பரணி நட்சத்திர நாளன்று நெல்லி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் சென்று அந்த நெல்லி மரத்திற்க்கு நீர் ஊற்றுவதாலும், நெல்லி மரத்தினடியில் அமர்ந்து தியானம் செய்வதாலும் விருட்ச பரிகாரம் செய்து கொள்வதாலும் நன்மை பிறக்கும்.

பரணி நட்சத்திரம் வரும் நாட்களில் எல்லாம் பரணி நட்சத்திர அன்பர்கள் நெல்லி மரத்தினடியில் அமர்ந்து துர்க்கா காயத்ரி மந்திரம், யம காயத்ரி மந்திரம் மற்றும் பரணி நட்சத்திர மந்திரம் இவற்றை தியானிப்பதால் வாழ்வில் தோன்றிய துன்பங்கள் விலகி இன்பமான வாழ்வும் செய்யும் காரியங்களில் வெற்றியும் கிடைக்க வைக்கும், மேலும் உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும் வற்றாத செல்வமும் மங்காத புகழும் அடைந்து நல்வாழ்வு வாழ வைக்கும்.


நெல்லி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் :
திரு நெல்லிக்காவல் நெல்லிவன நாதர் கோவில்
ஜெயங்கொண்டம் கழுகுமலை நாதர் கோவில்
பட்டீஸ்வரம் எமதர்மன் கோவில்
சுவாமி மலை சுவாமி நாத சுவாமி கோவில்
திரு ஆவினங்குடி குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோவில்
திருநெல்வாயில் திருப்பழையாறை வடதளி கோவில்

இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் அதனதன் விருட்சம், அதிதெய்வம் மற்றும் அதிதேவதை இம்மூன்றும் ஒரே இடத்தில் தரிசிக்கும்படி "ஸ்ரீ விருக்ஷ பீடம்" நிர்மானிக்கப்பட்டு தினசரி பூஜைகள் செய்து ஐயா "லக்ஷ்மி தாச ஸ்வாமிகள்" அவர்களால் நேர்த்தியாக நிர்வகிக்கபடுகிறது. பரணி நட்சத்திர அன்பர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திர நாட்களில் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" வந்தடைந்து தங்களின் நட்சத்திர விருட்சத்தின் கீழமர்ந்து தியானித்து தங்கள் வாழ்வில் கர்மவினையால் உண்டான பாதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

Monday, September 10, 2018

அஸ்வினி நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஆவார், கேது ஞானகாரகன், அதாவது ஞானத்திற்கு அதிபதி. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூட்சும புத்தி கொண்டவர்கள். ஆடை அணிகலன்களில் ஆர்வம் கொண்டவர்கள், அனைவராலும் விரும்பப்படுபவர்கள். எடுத்த காரியங்களை எப்பாடு பட்டாவது முடிக்கும் திறன் கொண்டவர்கள். சாந்தமான குணம் உடையவர்கள், தாராள மனமும் உண்டு. மன உறுதி கட்டுப்பாடு மிகுந்தவர்கள், அதேசமயம் பணிவும் உண்டு, பிறரை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். எந்த தொழிலை செய்தாலும் ஆர்வமுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு பிறரின் பாரட்டுக்களை பெறுவர். துணிச்சலும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு இரு கண்களை போன்றது, அதேசமயம் இவர்கள் புகழுக்கு மயங்குவதும் உண்டு. வாழ்வின் சுகபோகங்களை அனுபவிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். மிகுந்த செயல்திறன் கொண்ட இவர்களின் பேச்சு ஒன்றாகவும் செயல் வேறாகவும் இருக்கும், இவர்களுக்கு நல்லவர்கள் மட்டுமின்றி தீய நண்பர்களின் நட்பும் இருக்கும். சரி இவர்களின் நல்ல குணங்கள் ஒருபுறம் இருக்கட்டும், இவர்களின் வாழ்வில் தடை கற்களாக விளங்கும் எதிர்மறை குணங்கள் விலகவும், இவர்களுக்கு உண்டாகும் நட்சத்திர தோஷங்களை போக்கவும், இவர்களின் வாழ்வில் உண்டான சோதனைகள் மாறி சாதனைகளும், வளமான வாழ்வும், செல்வச்செழிப்பும் உண்டாக செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி இனி காண்போம்.


அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதெய்வம் :


"அன்னை சரஸ்வதி தேவி"

"த்ரியக் முகம்" என்ற சமநோக்கு கொண்டதாக இருபத்தியேழு நட்சத்திர வரிசையில் முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்திற்கு அமிர்தத்தின் நிற வெண்ணிறப்பட்டாடை உடுத்தி, வேதங்களின் அதிபதியாம் படைப்புக் கடவுள் பிரம்மாவின் மனைவியாகி, கல்வி மற்றும் ஞானத்தினை உலகத்தோர்க்கு அருளும் அன்னை சரஸ்வதி தேவியே அஸ்வினி நட்சத்திர அன்பர்களின் அதிதெய்வமாகும். திருவாரூர் மவட்டம் பூந்தோட்டம் எனும் சிற்றூரில் கூத்தனூர் எனும் இடத்தில் அரசலாறு நதியின் கரையில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்திற்கு அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாட்களில் சென்று வழிபடுவது சால சிறந்தது ஆகும்.


சரஸ்வதி காயத்ரி மந்திரம் :


"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
 விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி !
 தன்னோ வாணீ ப்ரசோதயாத் !!"


அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை :


"அஸ்வினி தேவர்கள்"

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை அஸ்வினி தேவர்கள் ஆவர். இவர்கள் தேவ வைத்தியர்கள், சூரிய பகவானுக்கும் சஞ்ஞாதேவிக்கும் பிறந்தவர்கள். சஞ்ஞாதேவி பெண் குதிரை வடிவில் தவம் இயற்றிய போது சூரிய ஒளி பட்டு அந்த குதிரையின் இரு நாசித்துவாரங்களில் இருந்து தோன்றியவர்களே அஸ்வினி தேவர்கள். அஸ்வம் என்றால் குதிரை, அஸ்வத்திலிருந்து உருவானதால் அஸ்வினி தேவர்கள் என்ற பெயர் உண்டானது. இவர்கள் இருவரும் இணைபிரியாமல் இருப்பர், இவர்களே அஸ்வினி நட்சத்திர அன்பர்களின் அதிதேவதையாக இருந்து வளங்கள் தருகின்றனர். தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அமிர்தகலசத்தோடு வெளிப்பட்டவர் தன்வந்திரி பகவான், தன்வந்திரி பகவானிடம் அமிர்தம் பெற்று அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை காத்து வருபவர்கள் அஸ்வினி தேவர்களாவர். எனவே அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் தன்வந்திரி பகவானையும் வழிபடலாம். தன்வந்திரி பகவான் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தனி சன்னிதியில் இருந்து அருள் பாலிக்கிறர்.

கொல்லிமலை எட்டி மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும், இவ்வனத்தில் அஸ்வினி தேவர்கள் தவம் இயற்றியதால் அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் அஸ்வினி நட்சத்திரம் வரும் தினங்களில் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று வழிபடுவதும், தியானம் செய்வதும் அஸ்வினி தேவர்களின் திருவருளைப் பெற்றுத்தரும். அறப்பளீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் எட்டி மரமாகும்.


அஸ்வினி தேவர்களுக்குரிய மந்திரம் :


"அஸ்வினீ தேவதே ஸ்வேத வர்ணௌ
  தாவஸ்விநௌ து மஹ !
  சுதா சம்பூர்ண கலச தராலஜௌ
  அஸ்வ வாசு கநௌ !!"


அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார விருட்சம் :


எட்டி மரம்

Bottanical Name: Strychnas Nux - Vomica

அஸ்வினி நட்சத்திரத்தின் பரிகார விருட்சமாக விளங்குவது எட்டி மரமாகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்த பொழுது அமிர்தத்தோடு ஆலகால விஷமும் வெளிப்பட்டது அல்லவா, அந்த விஷத்தால் உலகமே அழிந்து விடும் என்று சிவ பெருமான் அவ்விஷத்தை தான் உண்டு உலகை காப்பாற்றினார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளமே இந்த எட்டி விருட்சம். உலகையே ஆலகால விஷத்தில் இருந்து இரட்சித்த பரம சிவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அஸ்வினி தேவர்கள் எட்டிமர வனத்தில் தவம் இருந்தனர்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள், தங்களுடைய பிறந்த நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திர நாட்களில் எட்டி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்களுக்கு சென்று எட்டி மரத்திற்கு நீர் ஊற்றுவதும், எட்டி மரத்தினடியில் தியானம் செய்வதும் மற்றும் விருட்ச பரிகாரங்கள் செய்து கொள்வதும் சிறந்த மாற்றங்களை வாழ்கையில் ஏற்படுத்தும் என்பது உறுதி. மேலும் அஸ்வினி நட்சத்திர அன்பர்கள் முறையாக அனுதினமும் சரஸ்வதி காயத்ரி, அஸ்வினி நட்சத்திர காயத்ரி மற்றும் அஸ்வினி தேவர்கள் மந்திரம் இவற்றை எட்டி மரத்தினடியில் அமர்ந்து தியானிக்க சகல வளமும் பெற்று, துன்பங்கள் நீங்கி இன்பமான வாழ்வும், செய்யும் செயல்களிலெல்லாம் வெற்றியும் பெற வைக்கும். மேலும் உடலை வாட்டும் நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும் வற்றாத செல்வமும் மங்காத புகழும் அடைந்து நல்வாழ்வு வாழலாம்.


எட்டி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள ஆலயங்கள் :

கொல்லி மலை அறப்பளீஸ்வரர் கோவில்
எட்டைய புரம் எட்டியீஸ்வரர் கோவில்
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள தன்வந்திரி சன்னிதி. 


இருபத்தியேழு நட்சத்திரத்திற்கும் அதன் விருட்சம், அதிதெய்வம் மற்றும் அதிதேவதை இம்மூன்றும் ஒரே இடத்தில் தரிசிக்கும்படி "ஸ்ரீ விருக்ஷ பீடம்" நிர்மானிக்கப்பட்டு தினசரி பூஜைகள் செய்து "லக்ஷ்மி தாச ஸ்வாமிகள்" அவர்களால் நேர்த்தியாக காக்கப்படுகிறது. அன்பர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாட்களில் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" வந்து தங்களுடைய நட்சத்திர விருட்சத்தின் கீழமர்ந்து தியானித்து தங்கள் வாழ்வில் கர்மவினையால் உண்டான பாதிப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

Saturday, July 14, 2018

கர்மவினையை வெல்ல

கர்மவினை :
நம் அனைவரின் மனதிலும் அடிக்கடி தோன்றும் ஆயிரமாயிரம் அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமில்லா கேள்விகள் ???
நான் தினமும் கடவுளை வழிபடாமல் இருந்தது இல்லை....
நான் தெய்வீக யாத்திரை சென்று புனித ஸ்தலங்களையும், புனித மலைகளையும் தொடர்ந்து தரிசித்து வருகிறேன்....
என்னால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்துவருகிறேன்....
நான் குறிப்பிட்ட சித்தரையோ ஞானியையோ குருமார்களையோ குருவாக ஏற்று வழிபட்டு வருகிறேன்....
யோகா தியானம் முதல் வாசியோகம் வரை எல்லாம் முறையாக செய்து வருகிறேன்...
மந்திர உபதேஷங்களைப் பெற்று வருடக்கணக்காக மந்திரங்கள் உச்சாடனம் செய்து வருகிறேன்
இத்தனை நான் செய்தும் இந்த கடவுளுக்கு என்மேல் கருணையே இல்லையா ?
என்னுடைய கண் முன்னே பல கொடியவர்கள் கூட நன்றாக வாழ்கிறார்களே...


இவ்வாறு இத்தனை நற்காரியங்களை புண்ணியங்களை நான் செய்தும் என் வாழ்வில் பல இன்னல்களை தினம்தோறும் சந்தித்து வருகிறேன், உதாரணமாக சரியான உத்தியோகமோ இல்லை வியாபரமோ அமைவதில்லை,போதிய வருமானம் கிடைக்கவில்லை,சீராக குடும்பத்தை நடத்த முடியாமல் திண்டாடுகிறேன், தீராத வியாதிகளால் துன்பப்படுகிறேன், மருத்துவ செலவுகள் உண்டாகி வாட்டுகிறது. கடனாளியாகிறேன், குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து பிரிவினைகள் உண்டாகி பிரிந்து வாழும் சூழ்நிலை,


நானும் பல ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொல்லும் தோஷங்களுக்கு உரிய பரிகாரங்களும் செய்தேன். ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று விடாமல் ஜோதிடர் சொன்ன அனைத்து விதமான பரிகார நிவர்த்தியும் செய்தாகிவிட்டது, ஆனாலும் இன்றுவரை ஒரு சிறு முன்னேற்றமும் நம்வாழ்வில் வரவில்லையே. துன்பங்களே போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனவே, என இப்படி நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடைதான் என்ன ???
கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும் :


இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், கிரகங்களின் சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த பிரம்மாவோ காக்கும் விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.?

இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும், சித்தர் பெருமக்களும் மற்றும் ஞானிகளும் முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

"நன்மையும் தீமையும் பிறர்தர வாரா"

உங்களுக்கு உண்டாகும் நல்ல பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த பிறவிகளில் நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை என்ற பெயரில் வினைப்பயன் எனும் விருட்சமாக வளர்ந்து உங்களை வந்தடைகிறது.

இன்னும் சற்றே விளக்கமாக பார்தோமேயானால், கடந்த பிறவிகளில் செய்த தொழிலில் நீங்கள் செய்த பாவம் அல்லது புண்ணியம் இருக்குமானால் இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவீர்கள். அதாவது முற்பிறவியில் தொழில் வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, தொழிலில் நஷ்டம், கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே முற்பிறவியில் நல்முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல் வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள் மூலமே துன்ப துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும் கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன்மூலம் நம்முடைய சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.கர்மாவும் பிரபஞ்சமும் ஜோதிடமும் :கர்மா :

நம் வேதங்களில் "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an Equal and Opposite Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.

"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்"

யஜூர் வேதம்: பிரகதாரண்ய உபநிஷத் 4.4.5

கர்மா என்பது ஒருவனுக்கு இறைவனால் எழுதப்பட்ட தலையெழுத்து இல்லை, முற்பிறவிகளில் அவரவர் செய்த வினைகளின் (செயல்களின்) பதிவு ஆகும். முற்பிறவிகளில் நல்ல கர்மங்களை (செயல்களை) செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் நல்ல எதிர்வினை உருவாகி அதன் பயனாக நனமை தரும் பலன்கள் கிடைக்கும். இதே ஒருவர் முற்பிறவியில் கெட்ட கர்மங்கள் கூடிய செயல்களை செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் துன்பமும் துக்கமும் அடைந்திருக்கும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனின் நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பே கர்மா எனப்படும், இது பிறவிதோறும் தொடரும் மற்றும் கணக்கிடப்படும் அதாவது மிகச்சரியாக கணிக்கப்பட்டு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பின்வரும் பாடலில் இது புரியும்.

"கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்

உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தமாம்

இருவினையும் கூடியெழும் புகுவினையே ஆகாமியமாம் - இங்கே

ஒருவினையும் வீண்போகா, உள்ளடங்கிப் பின்விளைவாம்"

                                                                                                                              -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மேற்கண்ட பாடலின்படி மனிதன் தன் பிறப்புகள் தோறும் மூன்று வகையான கர்மவினைப் பயன்களைப் பெற்று அனுபவிக்கிறான், அவை முறையே

சஞ்சித கர்மம்
பிராப்த கர்மம்
ஆகாமிய கர்மம்


இவற்றில் முதலாவதான "சஞ்சித கர்மா" எனப்படுவது நாம் கருவில் உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது முன் ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணிய வித்து, இந்த ஜென்மத்தில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்மவினை இதுவாகும். இந்த வினைப்பயனாவது தொடர்ந்து வரும் பிறவிகளிலும் செயல்படும். அதாவது இந்த சஞ்சிதகர்மாவினால் உண்டாகும் வினைப்பயன் முழுதும் இப்பிறவியில் செயல்படாமல் அனைத்து பிறவிகலுக்குமானதாய் இது இருக்கும்.

இரண்டாவதான "பிராப்த கர்மா" எனப்படுவது இப்பிறவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். அதாவது நாம் இப்பிறவியில் உடலெடுத்து வாழுங்காலத்தில் நம் ஜீவிதத்திற்க்காக நாம் செய்யும் வினையின் காரணமாக பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளால் உண்டாகப்போகின்ற கர்மவினை, இந்த கர்மாவால் விளையும் பலனையும் நாம் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டி வரும்.

மூன்றாவதாக "ஆகாமிய கர்மா" எனப்படுவது இப்பிறவியில் நாம் வாழுங்காலத்தில் நம் ஆசைகளால் (காம, குரோத, லோப, மத மற்றும் மாச்சர்யங்களால்) பிற உயிர்களுக்கு நேரடியாக செய்யும் அல்லது மறைமுகமாக செய்யும் நன்மை தீமைகளின் தொகுப்பாகும். இந்த வினைகளின் பலனை இப்பிறவியிலேயே அடையலாம் அல்லது நமது சஞ்சித கர்மத்தோடு சேர்க்கப்பட்டு எதிர்வரும் பிறவிகளிலும் அனுபவிக்க நேரிடலாம்.

இவ்விதமாக மூன்று விதமான கர்மங்களும் அதற்குண்டான வினைகளும் நம்மை என்றும் சூழ்ந்துள்ளன என்பதை மறவாதீர். இந்த கர்மவினை சங்கிலிப் பிணைப்பிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைத்து உயிர்களும் ஆத்மாக்களும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான்.

நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள். அதேபோல சந்தோசங்களும், இன்பமும், செல்வமும், நல்தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் என இவையனைத்துமே மேற்குறிப்பிட்ட கர்மவினைகளின் பலன்களாகும். இந்த கர்மாவை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்று பலவிதமான பரிகார நிவர்த்திகளை செய்தும் வினைப்பலன் மாறவில்லை, நம் வேதனை தீரவில்லை, கடன்களும் குறையவில்லை. அப்படியென்றால் நம் கர்மவினையை தீர்க்க வழியே இல்லையா.?

சரி ஜோதிடத்தின் வாயிலாக சற்றே கர்ம ஸ்தானகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாட்டையும் அலசுவோம். ஜோதிட சாஸ்த்திரத்தில் சஞ்சித கர்மாவைக் குறிக்கும் ஸ்தானங்கள் 1, 5 ,9 ஆகிய திரிகோண இராசிகளாகும். இந்த சஞ்சித கர்மத்தின் பலனை தேவாதி தேவர்கள் கூட அனுபவித்தே தீர வேண்டுமென்கிறது கர்ம சாஸ்த்திரம். ஏனென்றால் 1ம் இடம் லக்கினம், ஒருவருடைய உருவ அமைப்பு, குணாதிசயம், செயல்படும் திறன், தலைமைப் பண்புகள் இவைகளை குறிப்பிடும் இடம் லக்கினமாகும். இதை விளக்கி கூறினால் யாரொருவரும் பிறக்கும் போதே விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளராகவோ அல்லது உலக பெரும் பணக்காரனாகவோ பிறக்க இயலாது, விரும்பிய உடலமைப்போ முக அமைப்போ தீர்மானித்து பிறக்க இயாலாதல்லவா, எனவே சஞ்சித கர்மாவையும் மாற்ற இயலாது, பிறப்பிடம், தாய் தந்தை, உடலழகு இவையனைத்தையும் இதுவே தீர்மானிக்கும். அதேபோல 5ம் இடமென்பது புத்திர மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம், இதை சொல்ல வேண்டுமெனில் யாராலும் தனக்கு விரும்பிய நிறம், குணம், மனம் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதல்லவா, அதுபோலவே அதிர்ஷ்டமென்பதும் நம் கையில் இல்லை தானே. இவ்விரண்டு இடங்களைப் போலவே 9ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானமாகும் நம் பரம்பரையை குறிப்பிடுவதாகும், இதை எடுத்துக் கொண்டோமானால் எந்தவொரு ஆன்மாவாவது இன்னார்க்கு மகனாக இன்னாருடைய வம்சத்தில் பிறக்க வேண்டுமென்று தீர்மானித்து பிறக்க இயலுகிறதா, இல்லவே இல்லைதானே. அதனாலே தான் இந்த 1, 5, 9ம் பாவங்கள் (சஞ்சித கர்மா) தரும் பலன்களை தேவாதி தேவர்களும் மாற்ற இயலாது என்கின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் பிராப்த கர்மாவிற்குரிய ஸ்தானகளாக 4, 7, 10 ம் பாவங்கள் ஆகிய கேந்திர இராசிகளாகும். இதில் 4ம் இடம் சுகஸ்தானம், அதாவது ஒருவர் நன்றாக சாப்பிட்டேன், நிம்மதியாக தூங்கினேன் என்பதில் ஆரம்பித்து வீடு, வாசல், வாகனம், செல்வம், சொத்துபத்து எனும் வாழ்வில் அடையும் அனைத்து இன்பங்களுக்கும் காரணம் சுகஸ்தானமே ஆகும். 7ம் இடம் என்பது களத்த்திர ஸ்தானம், இதுதான் உங்களின் வாழ்க்கைத்துணை அவரால் அடையும் இன்பம் முதலியவற்றைக் குறிக்கும். 10ம் இடமானது கர்ம ஸ்தானம் ஆகும், அதாவது தொழில் ஸ்தானம், இது உங்களின் தொழில் வியாபாரம் அதனால் உண்டாகக் கூடிய வருமானம் சுகம் முதலியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த பிராப்த கர்மா ஸ்தானங்களில் ஏற்படும் கர்மரீதியான கெடுபலன்களை சரியான பரிகாரங்களை செய்வதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இவற்றைப் போலவே ஆகாமிய கர்மாவிற்க்குரிய ஸ்தானங்களாக ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுவது 2, 8, 11ம் பாவங்களான கர்ம இராசிகளாகும். இதில் 2ம் இடம் தன, குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகும். 8ம் இடம் யோகஸ்தானம் எனவே இது புதையல், அதிர்ஷ்டம், லாட்டரி, ரேஸ் போன்ற எதிர்பாராத நிலையில் அடையும் நன்மைகளாகும். 11ம் இடம் லாபஸ்தானமாகும். இந்த மூன்று பாவங்களும் ஒருவரின் செல்வ செழிப்பை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை. இவற்றில் ஏதேனும் கர்மவினை பாதிப்புகள் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வதினால் பலன் உண்டாகுமென ஜோதிடம் சொல்கிறது.
கர்மாவும் தெய்வமும் :


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்மவினையை இயக்கும் கர்மதெய்வம் ஒன்று உண்டு. அந்த கர்ம தெய்வத்தின் தாள் பற்றி தொழுது வந்தாலே கர்மவினையால் விளையும் கெடுபலன் குறைந்து நன்மைகள் நடக்கத் துவங்கும். நமக்கு வரும் கர்மவினை பலங்கள் நம்முடைய எந்த தவறினால் வந்தது யாருக்கு எந்த வகை தீமை செய்ததால் வந்தது என்றறிந்து அதற்கு இப்பிறவியில் எந்த வகையான பூஜைகள், தானங்கள், பரிகார நிவர்த்திகள் செய்ய வேண்டுமென்பதையும் எப்படி செய்ய வேண்டுமென்பதையும் பற்றி இனி விரிவாக காண்போம்.கால புருஷ தத்துவமும் கர்மாவும் :


கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை பின்வரும் படம் விளக்கும்.தர்ம இராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு.

தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும்.


கர்ம இராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்.

கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் தொழில் அமைந்தால் அதன் பலனாக யோகத்தையும், நற்பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வும் அமையும். இதே நியாய தர்மங்களை புறந்தள்ளி விட்டு நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு தீமை செய்தால் அதன் விளைவாக கெடுபலன்களையும், கொடிய தோஷங்களையும் பெற்று துன்பகரமான வாழ்வு அமையும்.


காம இராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்.

இங்கு காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். ஆசைகளிலே நல்லதுமுண்டு, தீயதுமுண்டு. நல்வழியில் பொருளீட்டி செல்வந்தனாகி குடும்பத்தை காப்பற்ற வேண்டுமென்பது நல்ல வகைப்பட்ட காமம். பிறன் மனையாளை தீண்டியே தீர வேண்டுமென்ற ஆசை கெட்ட காமமாகிறது. இதன் படியே நம் வாழ்வின் அனைத்து பலாபலன்களும் உருவாகின்றன.


மோட்ச இராசிகள்: கடகம், விருச்சிகம், மீனம்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.

மேற்கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் அது நம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்று அறிக. தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

"எழாமல் வாசனையை கொன்றோன் ஞானி

ஏகாமல் வாசனையை அடித்தோனே சித்தன்"

                                                                                   -சட்டை முனி நாதர்

இங்கு வாசனை என்பது கர்மவினை, இதன் இயல்பாவது பிறவிதோறும் தொடர்ந்து வருவது. ஞானியானவன் இப்பிறவியில் இக்கர்மவினை ஆன்மாவை பற்றா வண்ணம் தடுத்துக்கொள்பவன். ஆனால் சித்தனானவன் எப்பிறப்பிலும் தன்னை கர்மவினை அனுகாத வண்ணம் விரட்டியடிப்பவன் ஆவான்.

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் நம்மில். பாபா, சாய் பாபா, ரமண மகரிஷி, வேதத்திரி மகரிஷி, யோகி ராம்சுரத்குமார், பகவான் ரஜனீஷ் (ஓஷோ), சுவாமி விவேகானந்தர் ஆகிய அனைவருமே ஞானிகள் என கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இப்பிறப்பில் தங்களுடைய கர்மாவின் சூட்சுமத்தை அறிந்து கர்மவினையானது தன்னை பற்றிக் கொள்ளா வண்ணம் தடுத்துக் கொண்டவர்கள். இதை போல நம் சித்தர்கள் கர்மவினை எக்காலத்திலும் எப்பிறப்பிலும் தன்னை பற்றிக்கொள்ள முடியாதபடி விரட்டியவர்கள்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல கர்மாவை இயக்கும் தெய்வம் உண்டு, அதை பற்றிக் கொண்டோமானால் கர்மாவில் இருந்து விடுபடலாம், இங்கு ஓர் மிகப்பெரும் உண்மையினை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு புரியும். கோவில்கள் நிறைந்த கேரளாவில் பிறந்த ஆதி சங்கரர் எதற்காக தமிழகத்தில் காஞ்சிபுரம் வந்து காமட்சியை பற்றினார், சிவ ஸ்தலங்கள் நிறைந்த திருச்சுழியில் பிறந்த ரமண மகரிஷி எதற்காக திருவண்ணாமலை ஈசனை பற்றினார், விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ணர் எதற்காக பத்ரகாளியை பற்றினார். இவர்கள் எல்லாம் யாரை நாம் பற்றிக்கொண்டால் நம் கர்மாவை கட்ட முடியும் என்று உணர்ந்த மகா ஞானிகள். பிறவிப்பயனை அடைந்து விடவும் இன்னல்களை தீரவும் தொழ வேண்டிய தெய்வ இரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கையாண்ட உண்மையை இவர்களின் வழிவந்த சீடர்களுக்கோ பக்தர்களுக்கோ சொல்லித்தரவில்லை. தற்போதுள்ள ஞானிகளும் இந்த உண்மையினை உணர்ந்து தான் தங்களின் கர்ம அதிதெய்வம் உள்ள இடங்களில் பீடம் அமைத்து பூஜித்து வாழ்வில் வளமடைகின்றனர். பக்தர்கள் மேலும் மேலும் அங்கு சென்று பூஜைகள் யாகங்கள் செய்வதால் சக்தி பலமடங்கு பெருகி அவ்விடம் சிறக்கிறது. அவர்களும் உயர்கிறார்கள். ஆனால் அங்கு வழிபட்ட உங்கள் கர்மா மறியதா.?

கர்ம தெய்வத்தினை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், நம் நண்பர்களின் அன்னையரை நாம் அன்னையாகவே பாவிப்போம், வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றே அழைப்போம். நண்பனின் இல்லம் சென்றால் ஒருவேளை உணவும் தேனீரும் நிச்சயம் கிடைக்கும், விஷேச நாட்கள் எனில் இரண்டொரு நாட்கள் கூட கிடைக்கும். ஆனால் தினந்தோறும் நண்பனது அம்மாவிடம் உணவு கிடைத்து விடுமா?. நீயும் எனக்கொரு பிள்ளை மாதிரி என்றுகூட சொல்லி இருப்பார்கள், ஆயினும் நிரந்தரமில்லை. ஏதேது விட்டால் ஆஸ்தியில் பங்கு கேட்பான் போல என்று துரத்தப்படுவோம். மாறாக நம்மை பெற்ற அன்னையிடம் அதை நாம் எதிர்பார்க்கலாம், தன் குருதியை பாலாக்கி தந்தவள் அல்லவா அவளது அனைத்துமே நாம் தானே. அது போலவே நாம் வழிபடும் தெய்வங்களும் அந்த நாளைக்கோ அந்த வேளைக்கோ பலன் தரலாம் ஆயுள் முழுவதும் நிரந்தர பலன் தர இயலாது, அந்த நற்பலன்களை தருவது இப்பிறவியில் உங்களது கர்மாவினை இயக்கி ஆளும், மேலும் ஈன்ற அன்னையை போல உங்களை படைத்து வழி நடத்தக்கூடிய கர்ம அதிதெய்வம் மட்டுமே.

நண்பர்களே, கர்மாவை பற்றியும் கர்மவினையின் இயக்கங்களை பற்றியும் ஜோதிட ரீதியில் கர்மவினைகளை எவ்வாறு கண்டுணர முடியும் என்பதெல்லாம் விரிவாக பார்த்தோம். இருப்பினும் "குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது" மற்றும் "குருவருள் இன்றி திருவருள் வாய்க்காது" என்பதனை உணர்ந்து குருவின் ஆலோசனை பெற்று கர்ம வினை பரிகார நிவர்த்தி செய்து கொள்வது நலம். இதைபற்றி மேலும் அறியவும் தகுந்த ஆலோசனைகளை பெறவும் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" ஐயா லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.

கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை நவ கிரகங்கள் செய்கின்றன, நவ கிரங்களையும் இயக்கும் அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். இங்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த சித்தர்களும், ஞானிகளும் வந்து நவ கிரகங்களை வழிபடவில்லை என்பது உண்மைதானே.நவகிரகங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் :

சூரியன் - சிவன்,
சந்திரன் - பார்வதி,
செவ்வாய் - சுப்பிரமணியர்,
புதன் - விஷ்ணு,
வியாழன் - பிரம்மா,
சுக்கிரன் - மஹா லக்ஷ்மி,
சனி - எமன்,
ராகு - பத்ரகாளி,
கேது - இந்திரன்.

இத்தகைய கர்ம அதிதெய்வங்களுக்கு உரிய சிலா ரூபங்களோ வழிபாட்டு முறைகளோ உலகில் எங்கும் இல்லை. முதன் முறையாக நமது ஸ்ரீ விருக்க்ஷ பீடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ளது. பக்தர்கள் இவ்வரிய நிகழ்வில் கலந்துகொண்டு கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் வளம் பெற அழைக்கிறோம்....கிருத்திகை நட்சத்திரம் விருட்சம் பரிகாரம்

கிருத்திகை நட்சத்திர அன்பர்கள் அறிவாற்றலும் நல்ல பேச்சாற்றலும் கூடவே செயல்திறனும் மிக்கவர்கள். இவர்களின் தூக்கத்திற்கான நேரமும் மிகக் குறைவ...